தொடரும் கொலைகள்! கையாளாகாத அரசை தோற்கடிக்க மக்களிடம் கோரும் சஜித்
சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்வும் இன்று இல்லை. குண்டர்கள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்களின் பிடியில் சமூகம் சிக்கியுள்ளது. மிருகத்தனமும் வன்முறையும் பரவியுள்ளது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசைத் தோற்கடிக்க வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பு குறித்து மேலதிக வகுப்புகள் எடுக்கின்றோம். வாருங்கள் எனக் கூறி பெருமையடித்த இந்த அரசு, இன்று பாதுகாப்பு குறித்து டியூஷன் வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. சமகாலத்தில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கொலைகள், உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
வீடுகள், வீதிகள், பணியிடங்கள் பாதுகாப்பற்று காணப்படுகின்றன. இன்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பத்திரம் வாக்குறுதிகளை மீறும் நாடகமாக மாறியுள்ளது.
பொருட்களின் விலைகள், எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணம், வற் மற்றும் பிற வரிகளைக் குறைப்பதாக வாக்குறுதி வழங்கினர். அந்த வாக்குறுதிகள் இன்னும் சரியாக நிறைவேற்றப்படவில்லை.
இந்த ஆளுந்தரப்பினர் ஒலிவாங்கியை எடுத்துக்கொண்டு பச்சைப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி, அவஸ்தைப்படுத்தி வருகின்றனர்.
வரவு - செலவு திட்டத்தில் கூட இல்லாத விடயங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பொய்களைக் கூறி நாட்டை ஏமாற்றும் இந்த கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





