அரச ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்ட சம்பளம்! தனக்கும் பதவி வேண்டும் என கோரும் முஜிபுர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய தனக்கும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மனு
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய முஜிபர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறித்த செவ்வியில் கூறியுள்ளார்.
முஜிபர் ரஹ்மான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தான் சபை உறுப்பினர் பதவியில் இருந்த விலகியதாகவும் எனினும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயின் எனக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




