அமெரிக்காவில் இருந்து ரணிலுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் பசில்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அவசியம் என்ற மனநிலையை கட்டியெழுப்ப ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிராம மட்டத்தில் மக்கள் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அங்கிருந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவர் இம்மாத இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிய வருகிறது.
பொதுத் தேர்தல்
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை நடாத்தவும், இல்லாவிடில் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வரவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும் பொதுத் தேர்தலை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.