அநுர அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியில் மக்கள்! சுஜீவ சேனசிங்க
அநுர(Anura Kumara Dissanayaka) அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடுமையான அதிருப்தியிலிருக்கின்றனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க(Sujeewa Senasinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடத்தில் நேரடியாக நாங்கள் கலந்துரையாடியபோது மக்களின் அதிருப்தி நிலை தெரியவந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போலி குற்றச்சாட்டுக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களுடன் நேரடியாக உரையாடிய போது ஆச்சரியத்துக்குள்ளானோம். அவர்கள் கடும் விரக்தியிலிருக்கின்றனர். இதற்கு முன்னர் பலமான எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால் தற்போது நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மக்களும் ஜனாதிபதித் தேர்தலைப் போன்று உணர்ச்சி வசப்பட்டு தீர்மானம் எடுக்காமல், இம்முறை சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
தற்போது சில ஊடகங்களில் என்மீது திட்டமிட்டு போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை தொடர்பில் எனது வீட்டுக்கு வந்து சோதனைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவித்த போதிலும், அவர்கள் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
அவ்வாறெனில் எதற்காக எம்மீது பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன? இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளேன்.
அன்று ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு எதிராக ஜனநாயகத்துக்காக போராடிய ரோஹண விஜேவீரவின் கட்சி உறுப்பினர் தற்போது ஜனநாயகத்துக்கு விரோதமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.