பொலிஸாரின் நடவடிக்கை பழிவாங்கலே: பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுகயீன விடுப்பு போராட்டம் (Photos)
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ஊழியர்கள் சுகயீன விடுப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப் போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ஊழியர்களினால் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இரவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பொஸிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர் என்று கருத்துப்பட செய்திகள் வெளிவந்ததுடன், சமூகவலைத்தளங்களில் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப் போராட்டம் குறித்து பிரதேச செயலக ஊழியர்கள்
கருத்து தெரிவிக்கையில்,
வெளியான செய்தி
“ முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து அத்தியாவசிய நோக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த மிகக்குறைந்த அளவிலான எரிபொருட்களை எடுத்து பொலிஸாரும் சில பிரதேச இளையோரும் கஞ்சா அல்லது போதை வஸ்த்துக்களை பிடித்தது போன்று செய்திகளை வெளியிட்டும் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது தேவையற்ற விடயம்.
எமது பிரதேச
செயலகத்தினையும், உத்தியோகத்தர்களையும் திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயலாகவே
காணப்படுகின்றது.
இப் பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் மின்வெட்டு நேரம் அதிகமாக காணப்படுவதால் மின்பிறப்பாக்கியின் தேவைக்காக குறித்த 50 லிட்டர் டீசலினை முன்னேற்பாடாக கொள்வனவு செய்து வைத்திருத்தல் பாரிய குற்றமில்லை.
களஞ்சிய அறையில் எலியின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதனாலும் வெப்பம் குறைவான பகுதியாக குளியலறை காணப்படுவதனாலும் எரிபொருளினை குளியலறையில் வைப்பதென்பது இயல்பான விடயமே தவிர இது எரிபொருளினை பதுக்கும் நடவடிக்கை இல்லை.
மண்ணெண்ணெய் நீர்இறைக்கும் இயந்திர பாவனைக்காக மிகக்குறைந்தளவிலான எண்ணெய் வைத்திப்பது எந்தவகையில் குற்றமாக கருதமுடியும். இவ் எரிபொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய தேவைக்கு எமது பிரதேச செயலகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டுள்ளது.
சுகயீன விடுப்பு போராட்டம்
எனவே எந்த வகையிலும் நியாயமில்லாத ஒருசிலரின் பேச்சை மட்டும் கருத்தில் கொண்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மேற்கொண்ட குறித்த செயலானது பிரதேச செயலாளர், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதன் காரணமாக குறித்த செயலிற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் பொருட்டு இன்று (01) அனைத்து உத்தியோகத்தர்களும் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடஉள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நேற்று முன்தினம் (30) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தையும் பிரதேச செயலரின் வதிவிடத்தையும் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் பிரதேச இளைஞர்கள் சிலரும் சேர்ந்து சோதனையிட்டு சிறிய அளவிலான தொகை எரிபொருட்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொலிஸாரின் இந் நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அனைத்து உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது “பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும்“, “ஊடகங்கள் ஊடக தர்மத்துடன் இயங்க மேண்டும்“ என்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எழுப்பினர்.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரந்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் மணலாறு ஆகிய பிரதேச
செயலகங்களிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது
மேலதிக செய்தி: யது (புகைப்படங்கள்)




