எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு முண்டியடிக்கும் மக்களின் அவலநிலை (Photos)
யாழ்ப்பாணம் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலங்கை விமான படையினால் இன்று பொது மக்களுக்கான எரிபொருளை பெற்றுகொள்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
மக்கள் மதிய வேளையில் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதிச்சீட்டுனை பெற்றுக் கொண்டனர்.
மக்களுக்கும் விமான படையினருக்கும் இடையே முறுகல்
இருப்பினும் அனுமதிச்சீட்டுனை வழங்குகின்ற விமானப்படையினர் மோட்டார் சைக்கிளில் காப்புறுதி பத்திரம்,வரி பத்திரம், மோட்டார் சைக்கிளின் இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பதிவு செய்வதன் காரணமாக ஒவ்வொருவரை பதிவு செய்யவும் நீண்ட நேரம் தேவைப்பட்டது எனவும் இதனால் மக்களுக்கும் விமான படையிருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பெட்ரோலினை பெற்று கொள்வதற்காக அரசாங்கம் கிராம சேவையாளர் ஊடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையையும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் நடவடிக்கையும், இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு அனுமதிச்சீட்டு வழங்குகின்ற முறையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றை விட இன்றையதினம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலாலி விமான படையினர் எரிபொருள் வழங்குவதற்கான அனுமதிச்சீட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதனால் மக்களிடையே அசௌகரியங்களும் குழப்பங்களும் தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் வெளியான தகவல் |
மக்கள் விசனம்
பிரதேச செயலகங்கள் ஊடாக கிராமசேவகர் மூலம் பதிவுகளை மேற்கொள்வது இலகுவான விடயம் எனவும் இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவுகளை மேற்கொள்வதால் தாம் அலக்களிக்கப்படுவதாகவும் மக்கள் அதிகாரிகளை குற்றம் சுமத்தினர்.
அத்துடன் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்கின்ற பொழுது நீண்ட நேர தாமதமும் தமது நேரம் வீணாக்கப்படுவதாகவும் எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய எரிபொருளை சரியான நடைமுறையில் வழங்க வேண்டும் எனவும் அனுமதிச்சீட்டுகளை பெறவந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை
திருகோணமலை-லிங்கநகர் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் இன்றும் (29) மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.
முச்சக்கரவண்டி ஒருபுறம் மோட்டார் சைக்கிள் மறுபுறம் இன்னும் லொறி டிப்பர் வாகனங்கள் மட்டும் ஒரு வரிசையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருட்கள் இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் அதிக அளவில் ஒன்று சேர்ந்தனர்.
இந்நிலையில் நீண்ட வரிசையில் நிற்கும் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதுடன் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அத்துடன் இராணுவ வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு எரிபொருள் நிலையத்துக்கு முன்னால் தமது கடமையினை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.