பிரதமர் ரணில் அரசாங்கம் தொடர்பில் மைத்திரிபால தலைமையில் முக்கிய முடிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது ஆதரவை உறுதிப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கட்சி உறுப்பினர்கள் விக்ரமசிங்கவுடன் ஒரு சந்திப்பை கோரியுள்ளதாகவும், அதற்கான நேரம் மற்றும் திகதியை ஏற்பாடு செய்து தருமாறும் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கப்போவதில்லை என கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில், கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறுவதற்கு பரிசீலித்து வருவதை உணர்ந்து திடீரென தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன தமது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவை திடீரென பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார்.
இந்த நியமனத்திற்கு எதிராக பல தரப்புக்கள்,குறித்த நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில்,மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து நியமனத்தை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.