சிறிலங்கா சுதந்திரக்கட்சி சஜித்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை
தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவு,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எவருக்கும் அமைச்சுக்கள் அல்லது துறைகள் உள்ளடக்கப்படவில்லை. எனினும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அது தயாரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்மையான அமைப்பு மாற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உடன்படிக்கையை நிறைவேற்றி நாட்டுக்கு சிறந்ததைச் செய்யப் பார்ப்பதாக சுமதிபால தெரிவித்துள்ளார்.
முன்னர், பிரதான ஆளும் கட்சியாக, எதிர்க்கட்சியாக செயற்பட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஓர் பிரிவாகவும், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவான பிரிவாகவும், பிரேமதாசவுக்கு ஆதரவாக ஒரு பிரிவாகவும் 3 ஆக பிளவுபட்டுள்ளது.
ஏனினும் சட்டரீதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரேயொரு பொதுச் செயலாளர் தாமே என்று ஜயசேகர தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் கட்சித் தலைமையகத்தில் ஒன்றிணையும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |