இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பயங்கர தாக்குதல்! முன்னாள் பெண் போராளி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் இரசாயண குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக 14 ஆண்டுகள் கடந்து ஒரு முன்னாள் போராளி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வவுனியாவில் ஈச்சங்குளம் பகுதியில் வசிக்கும் பாபு கஜேந்தினி(36 வயது) விடுதலைப்புலிகளுக்கு சிகிச்சைகளை வழங்கும் சுகாதார பிரிவில் மருத்துவ போராளியாக கடமையாற்றியுள்ளார்.
இறுதி யுத்தத்தை மறக்கவே முடியாது
இவர் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நான் போராட்ட காலத்தில் நேரடியாக முன் நிக்கவில்லை.ஏனென்றால் நான் ஒரு மருத்துவ போராளி. நான் பின் தளத்தில் தான் நின்றேன். எமக்கு கள அனுபவம் என்பதை விட களத்திற்கு பின்னால் காயப்பட்ட போராளிகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை செய்து அவர்கள் உயிரை காப்பாற்றிய அனுபவமே இருந்தது.
முதலில் என்னை மாலதி படையணியில் சேர்த்துவிட்டனர். பின்னர் மருத்துவ பிரிவிற்கு சென்று 2008 வரை மருத்துவ போராளியாக பணிபுரிந்தேன்.
இறுதி யுத்தத்தில் வேறொரு பிரிவுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கருகி இறந்த மக்கள்
என் வாழ்வில் இறுதி யுத்தத்தை மறக்கவே முடியாது. ஒரு இடத்தில் போராளிகளும் பொதுமக்களும் ஒன்றாக தான் சேர்ந்து பங்கரில் இருப்போம். சிறு பிள்ளைகளை பங்கருக்குள் அமர்த்திவிட்டு, வெளிப்பகுதியில் நாங்கள் இருப்போம். அங்கு ஒரு குண்டு வீசினால் நாங்கள் அனைவரும் சிதறி போவோம்.
இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் 5 ஆம் மாதம் 10 ஆம் திகதி நான் பங்கர் ஒன்றின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தேன்.
இதன்போது இலங்கை இராணுவத்தால் பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் மக்கள் என் கண் முன்னாடியே கருகி இறந்து விழுந்தனர்.
மரம் கருகி கரிக்கட்டையாக விழுவதைப் போன்று மக்கள் கருகி இறந்து கிடந்தனர். அவர்களை சென்று தொட்டு பார்த்தால் கரிக்கட்டை மட்டும் தான் இருந்தது. வேறு எதுவும் இல்லை.
இவ்வாறான பயங்கரமான குண்டு தாக்குதலை நடத்தி தான் இராணுவம் இறுதி யுத்தத்தில் எமது மக்களை அழித்தது.
பயங்கரமான குண்டு தாக்குதல்
அந்த பயங்கரத்தை சொல்ல வேண்டுமானால், பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக எனது கையின் ஒரு பகுதி கருகியது. இப்போதும் உடலின் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை சதை தான் உள்ளது.
அந்த குண்டு என்னை நேரடியாக தாக்கவில்லை. அதன் வெப்பம் மட்டும் தான் என்னை தாக்கியது. அப்படியாயின் அந்த குண்டு முழுமையாக ஒருவரை தாக்கும் போது அவர்களின் நிலையை நினைத்து பாருங்கள்.
அந்த இடம் முழுவதும் ரத்தமும் சதையுமாக இருந்தது. அதில் தான் நாங்கள் நடந்து வந்து வெளியேறினோம். இப்படி வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லும் போது 2009 ஆம் ஆண்டு 5 மாதம் 16 ஆம் திகதி என்னை காட்டிக் கொடுத்ததால், இராணுவம் என்னை கைது செய்தது.
எனக்கு கடுமையான காயங்கள் காணப்பட்டதால், ஐ.சி.ஆர்.சி என்னை பொறுப்பேற்றது.பின்னர் வவுனியா நீதி மன்றத்தின் ஊடாக நான் விடுதலை செய்யப்பட்டேன்.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
