14ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினம் இன்று: 3,750 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (19.05.2023) ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தேசிய படைவீரர் தின நிகழ்வின் போது நினைவு கூர்ந்துள்ளனர்.
குறித்த தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பதவி நிலை உயர்வு
அதற்கமைய 402 சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் , 3348 ஏனைய அதிகாரிகளுக்கும் இவ்வாறு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிகேடியர் நிலையிலுள்ள 7 அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், கேர்ணல் நிலையிலுள்ள 19 பேர் பிரிகேடியர்களாகவும், லெப்டினன் கேர்ணல்களாகவுள்ள 29 பேர் கேர்ணல்களாகவும், மேஜர்களாகவுள்ள 33 பேர் லெப்டினன் கேர்ணல்களாகவும், கப்டன் நிலையிலுள்ள 118 பேர் மேஜர்களாகவும், லெப்டினன்களாகவுள்ள 97 பேர் கப்டன்களாகவும், இரண்டாம் வெலப்டினன்களாகவுள்ள 90 பேர் லெப்டினன்களாகவும் பதவி நிலை உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு
அதே போன்று, படையணிகளின் பிரதானிகள், கோப்ரல் நிலை அதிகாரிகள், லான்ஸ் கோப்ரல் நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட பலருக்கும் இவ்வாறு பதவி நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பிரதி அமைச்சர்கள், சபாநாயகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், போரில் காயமடைந்த போர்வீரர்கள், இந்த போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் பாடசாலை மாணவர் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |