நுண்கடன் பொறியில் சிக்கிய மக்கள் : தீர்வில்லாது நீளும் பெரும் துயர்
பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் வாங்குதல் ஒரு வழி முறையான போதும் ஈழப் பரப்பெங்கிலும் நுண்கடன் பொறியில் சிக்கி சீரழிகின்றனர் தாயக வாழ் மக்கள்.
நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் திட்டச் செயன் முறையை இலகுபடுத்தி நேர்த்தியான கொள்கை விளக்கங்களை வழங்கிய போதும் வறுமை ஒழிந்தபாடில்லை.
நுண்கடன் பெறும் வழிமுறை
தாய்மார்களுக்கே நுண்கடன் நிறுவனங்கள் கடனை வழங்குகின்றன. குடும்பத்தின் பெண்கள் மூவர் அல்லது ஐவர் குழுவாக வேண்டும்.ஒவ்வொரு பெண்ணுக்கும் பிணையாக ஒரு ஆண் கையொப்பமிட்டு பிணை வழங்க வேண்டும். அந்த ஆண் பொதுவாக குடும்பத் தலைவராக இருக்க வேண்டும். அல்லது வேறொருவராகவும் கூட இருக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் குழுவில் உள்ள மற்றவருக்காக ஒப்பமிட்டுப் பிணை வழங்க வேண்டும். கடன் பெறுபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்ததும் கடன் வழங்கும் நிறுவனத்தின் பிராந்திய பணியாளர் கடன் பெறுபவர்களின் வீடு வந்து நிலைமைகளை பார்வையிடுவார்.
விண்ணப்பித்து ஒரு வாரத்தில் கடன் பணம் வழங்கப்பட்டு விடும். முதலில் சிறிய தொகையில் இருந்து ஆரம்பமாகும்.முதல் தடவை பெறப்பட்ட கடன் செலுத்தி முடிக்கப்பட்டதும் இரண்டாவது தடவை கடன் பெறப்படும் போது முதல் பெற்ற தொகையின் இரட்டிப்பில் கடன் வழங்கப்படுகின்றது.
நுண்கடன் நிறுவனங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் சிறிய மாற்றங்களுக்கு உள்ளாவதையும் அவதானிக்கலாம்.
கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
மக்களின் கடன் தேவைகள்
கடன் வாங்கும் போது சொல்லப்படும் அபிவிருத்தி என்பது பேச்சளவிலேயே காணப்படுகின்றன.
பொதுவாக ஒரு தொழில் முயற்சிக்காக கடன் பெற்று தொழில் செய்யும் போது அதிலிருந்து பெறப்படும் இலாபத்திலேயே பெற்ற கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும்.
இந்த அணுகுமுறை ஈழத்தமிழ் மக்களிடையே இல்லாது போய்க் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.ஒரு நோக்கத்திற்காக பெறப்பட்ட நுண் கடனை மற்றொரு தேவைக்காக பயன்படுத்துகிறனர்.
வருமானமற்ற தேவைகளினால் கடனை மீளச் செலுத்த முடியாத சூழல் தோன்றுகின்றது.இதனால் மற்றொரு கடனைச் பெற்று முதல் பெற்ற கடனை செலுத்துகின்றனர். கடன் பெறுவது இலகுவாக இருப்பதனால் தொடர்ந்து கடன் பெற முயற்சிக்கின்றனர்.
அடுத்த கடனைப் பெறுவதற்காக முதல் பெற்ற கடனை செலுத்தி முடிப்பதற்கு மீதமிருக்கும் தொகையை மொத்தமாக செலுத்தி புதிய கடனில் முன்பைவிட அதிக தொகையை கடனாகப் பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.
விவசாயிகள் ஒவ்வொரு போகத்திற்கும் கடனைப் பெற்று விவசாயத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
ஒவ்வொரு கடன் பெறுகையின் போதும் அதிகமான கடன் பெறுனர்கள் தங்கள் பொருளாதாரத்தில் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த கடன் அணுகலினால் அதிகமான வட்டி செலுத்தலுக்காக தினம் உழைக்கும் வருமானத்தை செலவிடுகின்றனர்.
தொடர்ந்து கடன் பெறும் ஒரு குடும்பத்தினரின் நிதிக்கணக்குகளை ஆராயும் போது அவர்கள் அவர்களது வருட வருமானத்தில் 90 % கூடிய பகுதி கடனை அடைப்பதற்காகவே பயன்படுத்தியிருக்கின்றனர்.
இங்கு கவனிக்க வேண்டியது கடனையும் வட்டியையும் சேர்த்து செலுத்துவதற்காக உழைக்கும் ஆற்றலுள்ளவர்கள் பெற்ற கடனை சரியான முறையில் வருமானமீட்ட பயன்படுத்துவார்களானால் அவர்களது வறுமை இல்லாதொழியும்.
ஆயினும் 2009 இற்குப் பிறகு மீள்குடியேறறத்தின் பின்னர் ஈழத்தமிழ் மக்கள் நுண்கடன் நிறுவனங்களால் இலக்கு வைக்கப்பட்டு கடன் வியாபார அணுகலை செய்கின்றமையானது அவர்களை வறுமையிலேயே தொடர்ந்தும் வைத்திருப்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மக்கள் இந்த துர்ப்பாக்கிய நிலையை உணரத வரை நுண்கடன் நிறுவனங்களால் மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாவது தடுத்திட முடியாது.
கடந்த காலங்களில் நுண்கடன் நிறுவனங்களில் இருந்து பெற்ற கடனை மீளவும் செலுத்த முடியாத போது அவமானப்படுத்தல்களுக்கு உள்ளானதும் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கும் தூண்டப்பட்டனர் என்பதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
பொருந்தாத அதீத கட்டண அளவீடுகள்
சில நுண்கடன் நிறுவனங்கள் கடனை வழங்கும் போது முதல் மாத கடன் பணம் என்றும் சேமிப்பு பணம் என்றும் வழங்க வேண்டிய கடன் பணத்தில் ஒரு சிறுதொகையினை பெறுவதோடு கோவைகளை பேணுவதற்கான செலவுகளைக் காரணம் காட்டி பொருத்தமற்ற ஒரு தொகையினையும் அறவிடுகின்றமையை அவதானிக்க முடிந்தது.
இதனால் திட்டமிட்ட கடன் கிடைப்பதில்லை.தேவைக்குரிய பணம் இல்லாதவிடத்து அந்த கடனில் மேற்கொள்ள முனைந்த தொழில் முயற்சியில் முழு இலக்கையும் அடைய முடியாத சூழலையும் அவதானிக்க முடிந்தது.
தாமத கடன் தவணைக்களுக்காகவும் வட்டிகளைப் பெறுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இது பற்றி நுண்கடன் பெற்ற மக்களிடையே உரையாடிய போது பணத் தேவை என்பதால் அவற்றை கவனமெடுப்பதில்லை.இருந்தும் அவை தங்கள் உழைப்பை வீணாக்கிவிடுகின்றன. என்று கருத்துத் தெரிவித்த நுண்கடன் பயனாளிகளும் உண்டு.
மீளமுடியாத நிலையால் தொடரும் கடன் பெறுகை
கடன் பொறியில் சிக்கிக் கொண்டவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு பெரும் தொகைப் பணம் உடன் தேவைப்படுவதால் மாற்றீடாக தொடர்ந்து கடன் பெற்று வருகின்றனர்.
ஒரு கடனைப் பெற்று முடிவுறுத்த தாமதமான மற்றொரு நுண்கடனை செலுத்துவதால் கடன் பெறுவதில் இருந்த விலகி வாழ முடியாத இக்கட்டில் வாழ்வதாகவும் இயலாமையை எடுத்தியம்பிய குடும்பங்கள் உதவியின்றி வாழ்வதையும் அவதானிக்க முடிகின்றது.
சில குடும்பங்கள் தங்கள் வருமானத்தை திட்டமிடாது ஆடம்பர வாழ்வுக்கான செலவுகளைக் செய்வதற்காகவும் இளைஞர் மற்றும் யுவதிகள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காகவும் நுண்கடனைப் பெற்று விட்டு பின்பு அந்த கடனிலினுந்து மீளமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நூறு குடும்பங்களில் ஒரு குடும்பமே கல்விக்காக நுண்கடனை பெற்றிருப்பதனையும் அதனை செலுத்துவதற்காக அதிக இடரை சுமப்பதையும் அவதானிக்க முடிந்தது.
"வருமானத்துக்கு ஏற்ப வாழ்வை திட்டமிடு. ஆடம்பரமாக வாழ விரும்பினால் அதற்கேற்ப வருமானத்தை பெருக்கு."
என்ற சிந்தனைவழி வாழ்தலே அறிவுடைமை என்று சுட்டிக்காட்டிய தொழில் முயற்சியாளரையும் ஆய்வின் போது சந்தித்து பேசக் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
உணரப்பட்ட நிதியாலோசனை வழிகாட்டலில் அவசியம்
தன்னார்வ தொண்டு பொது அமைப்புகள் சார்ந்த செயற்பாடுகளினால் இத்தகைய பொருளாதார இடரை சந்தித்துள்ள குடும்பங்களுக்கு நிதியாலோசனைகளை வழங்குதல் அவசியமாகின்றது.
குடும்பத்தின் மாத வருமானத்திற்கும் மாத செலவுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை இனம் காணவும் அதிலிருந்து முடிவுகளை எடுப்பதற்கும் வழிகாட்டல் அவசியமாகின்றமை உணரப்பட்டுள்ளது.
நுண்கடன் பெறுவதற்கு முன் அந்த கடன் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் அந்த முயற்சியில் வருமானத்தைக் கொண்டு எப்படி கடனை அடைப்பது என்பதும் அடுத்த முயற்சிக்கான நிதியை திரட்டுவது என்பதும் பற்றியும் செயல்திறன் மிக்க வழிகாட்டல் அந்த மக்களிடையே இல்லாமையை அவதானிக்க முடிந்தது.
தொடர் முயற்சிகளின் வெற்றியை அடுத்து மேலும் தொழில் விரிவாக்கத்திற்கு நுண்கடனை கோருவதும் அதனைப் பெற்று முன்செல்வதும் பாராட்டுக்குரியதே!
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 07 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.