இலங்கையில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து
இலங்கைக்கு அண்மித்த பகுதியில் 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையிலான புதிய நில எல்லை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.
இந்த அபாயம் காரணமாக இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 09 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.
4 மாதங்களில் குறுகிய காலத்தில் நாட்டில் 09 நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை நாட்டின் உள்பகுதியிலும், மீதமுள்ள நிலநடுக்கங்கள் நாட்டின் கரையோரத்திலும் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை 2020 இல் 16 சிறிய அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர் 2021 இல் 18 அதிர்வுகளும், 2022 இல் ஐந்து அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
2023 இல் இதுவரை ஒன்பது சிறிய நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. 'இந்தோ-அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவில் இலங்கை உள்ளது.
எனவே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு தட்டின் இரு மூலைகளிலும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. எனவே இலங்கையில் அதிக அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாக வாய்ப்பில்லை என்றும் அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மிகத் தெளிவான பதிவுகள் 2012 க்குப் பிறகே உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்-சிவா மயூரி