ஜனவரி முதலாம் திகதியிலிருந்தே பதிவுகளை ஆரம்பிக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!
இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை பதிவு செய்யும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முதலில் பெப்ரவரி 1ஆம் திகதியன்று பதிவு செய்யும் பணியைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தச் செயல்முறையை விரைவுபடுத்த ஆணையம் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பதிவு முடிந்ததும், திருத்தங்கள் மற்றும் முறைப்பாடுகளுக்காக பட்டியல்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாட்டில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடைபெறும் என்று ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையிலேயே இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.