வீடு புகுந்து கொள்ளையடித்து மின்சார கட்டணம் செலுத்திய திருடர்கள்
அங்குருவாத்தோட்ட, குருந்துவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 5.25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
உடுவர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் மற்றும் எகல்ஹேன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அங்குருவத்தோட்ட, குருந்துவத்தை பகுதியில் உள்ள அந்த வீட்டின் உரிமையாளர்கள் அனுராதபுரம் நோக்கி சென்றுள்ளனர். உரிமையாளர்கள் அன்றைய தினமே வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களது வீட்டில் திருடர்கள் புகுந்து தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதைக் காண முடிந்தது. இதையடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட தங்கத்தை அடகு வைத்து 3,60,000 ரூபா பெற்றுள்ளனர்.
திருடப்பட்ட பணத்ததை இருவரும் சமமாக பகிர்ந்து, ஒருவர் தனது வீட்டின் மின் கட்டணத்தையும், அடகு வைத்த தங்கத்தையும் மீட்டுள்ளார்.
மற்றொரு நபர் தனது மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை வாங்கியுள்ளார். இருவரிடமும் இருந்து இரண்டு லட்சம் பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.