கொழும்பில் இருந்து மகிந்த தப்பியது எப்படி....!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
திருகோணமலையை அண்மித்த தீவு ஒன்றில் ராஜபக்ச குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
மகிந்த, சமல், பசில் ஆகியோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குடும்பமும் இங்கு பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
கொழும்பிலிருந்து அங்கு தப்பிச் செல்வதற்கு தேவையான உதவிகளை இராணுவத்தினர் செய்துள்ளனர். இதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி அலரி மாளிகைக்குள் சிக்கியிருந்த மகிந்த, பலத்த போராட்டத்திற்கு மத்தியில் இராணுவ பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த சீன நிறுவனத்திற்கு சொந்தமான ஷங்கீரிலா ஹோட்டலில் தங்கிருந்த நிலையில், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலை நோக்கி பயணித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று விளக்கம் கோரியுள்ளது.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மகிந்த ராஜபக்ஷவுக்கு உலங்கு வானூர்தி வழங்கப்பட்டதாக விமானப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொழும்பில் இருந்து உலங்குவானூர்தி மூலம் செல்லும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலிருந்து இரண்டு பெண்கள் உலங்குவானூர்தியில் ஏறுவதைக் காணமுடிந்தது. மேலும், கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இருந்து மற்றொரு உலங்கு வானூர்தி புறப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.