ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள் (Live)
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பி இன்று வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து ஜே.வி.பியின் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினால் இந்த தகவல்கள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்கள் இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசியல் பீட உறுப்பினர், முன்னாள் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, மத்திய குழு உறுப்பினரும், ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலர் இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் “நாட்டை அழித்த திருடர்களின் வளையம் மொத்தமாக அம்பலமானது” என்ற தலைப்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டின் பொதுச் செல்வங்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஊழல் எதிர்ப்புக் குரல் என்பன இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிற்கு சமர்ப்பித்துள்ள மற்றும் சமர்ப்பிக்காத மோசடி மற்றும் ஊழல் ஆவணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.