கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானம்! பாரிய பொருளாதார நெருக்கடி குறித்து எச்சரிக்கை விடுத்த ரணில்
கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் வரி குறைப்பு செய்ய தீர்மானித்தபோது, நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகம்கொடுக்க அது வழிவகுக்கும் என ரணில் விக்ரமசிங்க அப்போதே எச்சரித்திருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் காலியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அனுபவம் மற்றும் திறமையிலேயே வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை முழு உலகுக்கும் முன்மாதிரியாக அவரின் தூரநோக்கு சிந்தனையில் குறுகிய காலத்தில் ஓரளவு கட்டியெழுப்பினார். அவரின் தூரநோக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட விசாலமானது.
ரணில் விக்ரமசிங்கவின் திறமையே ஐஎம்எப் நிதி கிடைக்கக் காரணம்
கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் வரி குறைப்பு செய்ய தீர்மானித்தபோது, நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகம்கொடுக்க அது வழிவகுக்கும் என ரணில் விக்ரமசிங்க அப்போதே எச்சரித்திருந்தார். அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பெடுக்க யாரும் முன்வராத நிலையில், நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் நாட்டை பொறுபெடுத்தார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுக்கும்போது நாட்டின் அன்றைய நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. ஆனால் விழுந்த சமூகத்தை மீள கட்டியெழுப்பி உலக நாடுகளுடன் இணைந்து முன்னுக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாகி இருக்கிறது.
மேலும், இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிய உலகில் வேறு நாடுகளுக்கு இன்னும் முறையாக தலைதூக்க முடியாத நிலை இருக்கும்போது ஜனாதிபதியின் சரியான நோக்கு காரணமாக நாட்டை மீள கட்டியெழுப்ப முடியுமாகி இருந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்தில் இருந்ததே தெரிவித்து வந்தார்.
அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவின் திறமையாலே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை குறுகிய காலத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமாகியது.
எமக்கு முன்னர் பல நாடுகள் நாணய நிதியத்தின் உதவியை கோரி இருந்தபோதும் அந்த நாடுகள் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முறையாக பூரணப்படுத்த முடியாமல் போயிருக்கின்றன.
எனவே, ரணில் விக்ரமசிங்கவின் இலக்கு இலங்கையை 2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதாகும். அதற்கான வேலைத்திட்டங்களையே தற்போது ஜனாதிபதி முன்னெடுத்து செல்கிறார். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் இலக்கை பூரணப்படுத்த அவருக்கு இன்னும் சில காலம் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |