இலங்கையில் ஒரே நாளில் அழிக்கப்பட்ட 2000 கோடி பெறுமதியான சொத்துக்கள்
இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களினால் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதற்கமைய இதுவரையில் 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காப்புறுதி செய்யப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு பெருமளவிலான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதால், காப்புறுதி நிறுவனங்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து 55 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை ஏற்றிச் சென்ற சுமார் 40 பேரூந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் மல்வான பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றுக்கு தீ வைத்து எரித்ததில் ஏற்பட்ட நஷ்டம் 200 ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெனியாயவில் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டல் வளாகம் எரிக்கப்பட்டதனால் இதே அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பல முன்னாள் அமைச்சர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.