வீதியில் பெண் ஒருவரின் ரகளையால் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மீது மனம்பிட்டி குடாவெவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரால் எறியப்பட்ட கல்லில் இருந்து தப்பிக்க முற்பட்ட போது, பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்போது காயமடைந்த 13 பேர் மனம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 12 பெண் ஊழியர்களும், பேருந்தின் சாரதியும் விபத்தில் காயமடைந்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து மீது கற்களை வீசியதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நீண்ட நாட்களாக அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
