அரச நிறுவனங்களால் நட்டம்! பணம் அச்சிட்டால் ஆபத்து
இலங்கையின் வருமானம் மிக மோசமான நிலையில் உள்ளது, முக்கியத் தேவைகளான கல்வி, சுகாதாரம், பொருளாதார வசதிகள் போன்றவற்றிற்கு செலவு செய்யாமல் அரசு நிறுவனங்களின் நட்டத்தை சுமப்பது பெரும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில் மேலும் பணம் அச்சிடப்பட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்களால் நடடம்
அரச நிறுவனங்களால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நட்டம் 286 பில்லியன் ரூபாவாகும். ஆனால் இவ்வாண்டு முதலிரு காலாண்டுகளில் மாத்திரம் 986 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு மேலும் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையே காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
எனவே இது தொடர்பில் விளக்கமளித்துள்ள பேராசிரியர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
குறைவான வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை உள்ளது. இலங்கையில் 22 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தாலும் வரி செலுத்தும் கோவைகள் அல்லது எண்ணிக்கை என்று பார்த்தால் 3 இலட்சத்து 39ஆயிரம் பேருக்குத்தான் அந்த கோவை இருக்கின்றது.
நிலைமை மேலும் மோசமாகும்
வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்று சொன்னால் அதில் ஊழல் இருக்கக் கூடாது, வினைத்திறனான நிறுவனங்கள் வேண்டும், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது, அரசியல்வாதிகள் வணிகர்களாக இருக்கக் கூடாது. இதெல்லாம் சேர்த்துத் தான் வரித்தளத்தினை விரிவாக்க முடியாத கட்டத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றது.
இதன் காரணமாக வருமானம் குறைவாக இருக்கின்றது. இதனால் பணத்தை அச்சிட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இந்த காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருமானத்தை அதிகரிக்காவிட்டால் பணத்தை அச்சிடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஊழல் காரணமாக, நிறுவனங்களின் வினைத்திறன் இன்மை காரணமாக, அரசியல் தலையீடு காரணமாக தாமதிக்குமாக இருந்தால் இந்த பிரச்சினை தொடரும்.
மீண்டும் பணத்தை அச்சிட வேண்டும். மீண்டும் பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும். எனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தாமதிக்குமேயானால் இந்த பிரச்சினைகளில் இருந்து இலங்கை அரசாங்கம் மீண்டு வராது. தொடர்ந்தும் பிரச்சினைகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.