ரணில் அரசாங்கம் மீது நம்பிக்கையை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும், சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கை ஏற்படவில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னமும் வங்கி முறைமையின் ஊடாக தமது பணத்தை அனுப்ப முன்வரவில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர் குழுக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்நிய செலவாணி
இதன்காரணமாக அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இன்னமும் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளன.
சமீபத்திய புள்ளிவிவரங்களுக்கமைய, கடந்த ஏழு மாதங்களில் இலங்கை பெற்ற அந்நிய செலாவணியின் அளவு கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த 3778 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியின் அளவு இந்த வருடம் 1889 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள்
மேலும், கடந்த வருடம் ஜுலை மாதம் 453 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி கிடைத்த நிலையில் இந்த வருடம் ஜுலை மாதம் 38.3 சதவீதம் குறைந்து 279 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை வெளிநாட்டு வேலைக்குச் சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 163522 ஆகும்.
வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அந்நிய செலாவணி பணவீக்கம் வளர்ச்சியின்மை தொடர்பில் அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் கவனம் செலுத்த வேண்டுமென புலம்பெயர் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்