அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்
மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த போராட்ட இயக்கத்துடன் இணைந்து கண்டன பேரணி ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஐக்கிய மக்கள் இயக்கத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக நடவடிக்கை
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் அடக்குமுறைச் சட்டங்களை மீளப்பெற வேண்டும், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எந்த திட்டத்தையும் செய்யாமல் மக்கள் மீது வரியை சுமத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு உரம், மீனவர்களுக்கு எண்ணெய், மாணவர்களுக்கு படிக்கும் வசதி, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் போன்றவற்றை வழங்காத அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
மாணவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் இணைந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணியொன்றை நடத்தவுள்ளதுடன், பல எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.