நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் ரணிலின் சாதகமான அறிவிப்பு
நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று (06) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான முதல் அடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது. ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம்.
அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
தற்போது அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்தை சமர்ப்பித்துள்ளது. அதற்குள் பல இலக்குகள் உள்ளன. 2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 5 சதவீதமான காணப்பட வேண்டும். இதுவரையில் பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்திலேயே காணப்படுகிறது.
அதனால் 2027 இற்குப் பின்னர் 8 சதவீத வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தேவையும் உள்ளது. நாடு அபிவிருத்தி அடையும் போது 15 வருடங்களுக்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பல நாடுகள் அபிவிருத்தி கண்டுள்ளன.
சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளும் அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்றன. நாட்டின் தொழில் இன்மை பிரச்சினையை 2025 ஆம் ஆண்டளவில் 5 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
2040 களில் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரம் காணப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக இதனைச் செய்ய முடியுமென இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அந்த இணக்கப்பாடுகளையும் சட்டமாக்குவோம்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டை பொறுப்பேற்றாலும் அந்த இலக்குகளை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதனால் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான முதல் அடியை வைத்திருக்கிறோம்.
அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் நாட்டின் இளையோருக்கு நல்ல நாடு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவோம்.
அதற்காக மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |