இலங்கையின் அபிவிருத்தி பாதையில் முக்கிய பங்காற்றி வரும் Eco-tourism..!
சுற்றுலா, இலங்கைக்கு ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறை என்ற அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானமாக இயங்கி வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை நாடானது, வரலாற்று, கலாசார மற்றும் இயற்கை வளத்தில் செழிப்பாக விளங்குகிறது.
இயற்கை அழகு ததும்பிக் கிடக்கும் மலைகள், காடுகள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகள் என இலங்கை, சுற்றுலாப்பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
அந்நிய செலாவணி
இலங்கையின் அபிவிருத்திக்கு பங்காற்றி வரும் சுற்றுலாத்துறையில், தற்போது உலகெங்கும் முக்கியமான ஒரு விடயமாக பார்க்கப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco-tourism), அதாவது இயற்கைக்கு சாதகமான முறையிலான சுற்றுலாத் திட்டங்களும் இடம்பிடித்துள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கு சுற்றுச்சூழல் சுற்றுலா ஒரு குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டும் திட்டங்களில் ஒன்றாகும், இது தேசிய பொருளாதாரத்திற்கும் அந்நிய செலாவணி வருவாய்க்கும் பெரும் பங்காக இருந்து வருகின்றது.
இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் (DWC) பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதிலும் சுற்றுலாவிலிருந்து வருமானத்தை ஈட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
அதனடிப்படையில், சுற்றுச்சூழல் சுற்றுலாவினால் நாட்டிற்கு இதுவரை 275 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈட்டப்படும் வருவாய்
அதேவேளை, எதிர்வரும் 2029ஆம் ஆண்டுக்குள் குறித்த வருவாய் 622.70 மில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அபிவிருத்திக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கும் சுற்றுச்சூழல் சுற்றுலாவும் வளர்ந்து வரும் ஒரு முக்கிய சந்தையாக பயன்படுத்தப்படுகின்றது.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இலங்கையிலும் சுற்றுச்சூழல் சுற்றுலா முக்கியத்துவம் பெறுகிறது.
இது சுற்றுச்சூழலுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை வழிநடத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், உள்ளூர் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுவதும் ஒரு திட்டமாகும்.
வெளிநாட்டு பயணிகள்
இது கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு குறைவான தாக்கம், விழிப்புணர்வு உருவாக்கம், உள்ளூர் மக்களுக்கு ஆதாரம் வழங்கல் மற்றும் விருந்தினர்களுக்கு தரமான அனுபவம் ஆகியவையே இதன் அடிப்படை கொள்கைகளாக உள்ளன.
இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள், நூற்றுக்கணக்கான பறவை மற்றும் பாலூட்டி இனங்கள், பூக்கும் தாவரங்கள் மற்றும் கடல் பல்லுயிர்கள் காணப்படுகின்றன.
இது உலகின் பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இலங்கையை திகழச் செய்கின்றது. யுனெஸ்கோ பாரம்பரிய தளமான இலங்கை, விலங்குகளும் தாவரங்களும் செறிந்துள்ள நாடு.
கட்டுப்பாடான இயற்கை நடைபயணங்கள் சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவங்கள் வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றது.
சிறுத்தைகள், யானைகள் மற்றும் பறவைகளின் தாயகமான யால, சுற்றுச்சூழல் சஃபாரிகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் மூலம் சுற்றுலாவை இலங்கை அரசாங்கம் மேம்படுத்தி வருகின்றது.
உள்ளூர் பொருளாதாரம்
இதற்கிடையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது, அந்நிய செலாவணியை உருவாக்குகிறது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
அந்தவகையில், கடந்த 2019ஆம் ஆண்டில், சுற்றுலா உள்ளூர் பொருளாதாரத்திற்கு 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுச்சூழல் சுற்றுலா மூலம் 275 மில்லியன் வருவாய் ஈட்டுகின்றது.
இதன் காரணமாக இலங்கையில் சுற்றுச்சூழல் சுற்றுலா, தொடர்ந்து வளர்ச்சியடையவும் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தவும் அதீத கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய உந்துதலாக, சரியான நிலைத்தன்மையை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அங்கீகரித்துள்ளது.
Eco-Friendly
சுற்றுலா ரீதியிலான தொழில்துறையின் நீண்டகால நன்மைகளை உறுதி செய்வதற்காக பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளை SLTDA ஊக்குவித்து வருகிறது.
மேலும், தேசிய சுற்றுலா கொள்கை மற்றும் சுற்றுலாவிற்கான இலங்கை உத்திசார் திட்டம் உள்ளிட்ட நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேலும் மேம்படுத்துவதற்காக, தேசிய பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நடவடிக்கைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் முதலீடு செய்து வருகின்றது.
இலங்கையின் வளங்களை இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் அதன் மூலமான வருமானத்தை ஈட்டுவதற்கும் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சுற்றுச்சூழல் தொடர்புடைய நகர்வுகளை இயற்கைக்கு ஏதுவான வகையில் (Eco-Friendly) மேற்கொள்வது தலையாய கடமை என்பதில் ஐயமில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 09 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




