Easy Cash மற்றும் M-Cash பரிமாற்றத்தில் நடக்கும் மோசடி : பொலிஸார் சுற்றிவளைப்பு
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் Easy Cash மற்றும் M-Cash போன்ற முறைகளை பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு செய்வதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, போதைப்பொருள் கடத்தலை தடுக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய நேற்று மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
1,964 Easy Cash மற்றும் M-Cash மையங்கள், 2,131 அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல் தொடர்பு மையங்கள் (communication), ரீலோட் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் அமைந்துள்ள 1,074 இடங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வணிக வங்கி கிளைகள் உள்ள 1,202 இடங்கள் தொடர்பாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சந்தேகத்தின் பேரில் 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 சந்தேக நபர்களும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ள சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.