இயற்கை பேரழிவுகள் மீண்டும் நிகழாதிருக்க நீண்டகால திட்டங்கள்! ஜனாதிபதி வலியுறுத்து
எதிர்காலத்தில் பாரிய அளவிலான இயற்கை பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நீண்டகால திட்டத்தின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்டத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், மறுஆய்வு செய்வதற்காகவும் குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொண்டார்.
ஜனாதிபதியின் நன்றி..
இந்தக் கூட்டத்தின் போது, நெருக்கடியை எதிர்கொள்வதில் ஒன்றிணைந்து பணியாற்றிய பொது அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படை வீரர்கள் உட்பட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மீட்டெடுப்பது, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், தொலைத்தொடர்பு மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் - விவசாய நிலங்களை மீண்டும் பயிரிடுதல், விவசாய நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குதல், சுகாதார சேவைகளை மீட்டெடுப்பது, பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு வசதி செய்வது குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என்றும், அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க தொடர்புடைய சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.