தேசத்தை காப்பாற்றிய தந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! ஐக்கிய தேசியக் கட்சி புகழாரம் (Photos)
டி.எஸ்.சேனநாயக்க அவர்களை தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்ரமசிங்க அவர்களை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியா, மில் வீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை இன்று (28.05.2023) திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி
‘‘ஐக்கிய தேசியக் கட்சியே 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்று தந்தது. சுதந்திரத்திற்கு பின்னரான 75 வருடத்தில் கடந்த 40 வருட காலம் யுத்தம் காரணமாக வடக்கிலும், தெற்கிலும் அபிவிருத்தி பாதிப்படைந்தது.
75 வருடத்தின் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், ஜனாதிபதி ஆகியோர் வர முடியாத நிலை வந்ததால் இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இந்த பிரச்சினைகளை சவாலாக ஏற்று அதனை தீர்க்க முன் வந்தவர் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
டி.எஸ்.சேனநாயக்க அவர்களை தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்ரமசிங்க அவர்களை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் தற்போது இந்த நாட்டில் அனைத்து மக்களும் இன, மத, பேதங்கள் இன்றி ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று அரசியல் போச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்
இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்
என்ற பேதங்கள் இல்லாது எல்லோரும் ஒரு குடையின் கீழ் வந்து நாட்டை அபிவிருத்தி
செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்.
2048 ஆம் ஆண்டு முழுமையாக அபிவிருத்தி அடைந்த நாடாக இந்த நாட்டை மாற்ற அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். சிலர் அதை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் திட்டமிட்டு செயலாற்றுகிறார்.
எல்லா சமூகங்களும் மேம்பட வேண்டும். அதற்கு எல்லா சமூகங்களுக்குள்ளும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் 2048 ஆம் ஆண்டு ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக இந்த நாடு அமையும்.
அதனால் நன்மை அடையப் போவது இந்த நாட்டு மக்களே. அந்த சுபீட்சமான 2048 இற்கு நாம் செல்ல வேண்டுமாக இருந்தால் அவருடன் இணைந்து அவரை பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.மயூரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, வர்த்தக சங்கத்தினர், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |