இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்
இலங்கை இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
16000 இராணுவப் படையினர் இவ்வாறு ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ள தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறுப்படுகிறது.
செலவு குறைப்பு நடவடிக்கை
அரசாங்கம் பல்வேறு வழிகளில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் இராணுவப் படையினரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாகவும் அதிகளவில் தேவையின்றி செலவிடப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளே குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுய விருப்பின் அடிப்படையில் சுமார் 16000 படையினரை ஓய்வூறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முப்படைகளிலிருந்தும் தப்பிச் சென்ற அல்லது அறிவிக்காமல் விலகிக் கொண்டவர்கள் கிரமமாக பதவி விலகுவதற்காக பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடங்களை நிரப்புவதில்லை
கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இந்த மாதம் 31ஆம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய விருப்பின் அடிப்படையில் பதவி விலகும் படைவீரர்களினால் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தில் இந்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
