இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய வாய்ப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினையே இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தேசிய வளர்ச்சி பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் “கிராமத்துக்கு கிரிக்கெட்” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செயற்திட்டத்தின் முதல் கட்டம்
இதன் முதல் கட்டம் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இயற்கையாகவே திறமையுடையவர்களை இனங்கண்டு அவர்களை தேசிய அணிக்குள் இணைத்துக் கொள்வதே இந்த செயல் திட்டத்தின் பிரதான நோக்கம் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் உதவியுடன் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் மேற்கொள்ளப்படும் போட்டி கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடாத பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளின் திறமைகளை மதிப்பிடுவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.