இலங்கை அணியின் படுதோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத சதி
புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எனவே இனியாவது இவ்வாறான தோல்விகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் காணப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவரும் அறியாத உள்ளகக் காரணி
இதேவேளை, 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் தோல்வியடைந்து நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் வைத்து கருத்து வெளியிட்ட கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, “ 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் வெளியே இருந்த சதித்திட்டமே” என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர்,
“இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத உள்ளகக் காரணிகளை பிரமோத்ய விக்ரமசிங்க இனங்கண்டிருக்கக் கூடும்.
எனவே அவரது கூற்றின் படி இதற்கு எவரேனும் பொறுப்பு கூற வேண்டுமெனில், அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கமைய தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவினால் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னரே எம்மால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அதற்கமைய பிழைகளை திருத்திக் கொண்டு எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். எனவே அவ்வாறு ஏதேனும் காரணிகள் காணப்பட்டால் அவை முன்வைக்கப்படுமானால் அது சிறந்ததாகும்.
கிரிக்கட் போட்டிகளில் தோல்வியடைந்தது போதும். புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எனவே இனியாவது இவ்வாறான தோல்விகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |