இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்! கடன் தரப்படுத்தலை உயர்த்திய S&P Global
S&P Global (Standard & Poor’s) நிறுவனம், இலங்கையின் இறையாண்மைக் கடன் தரப்படுத்தலை CCC+/C என்ற மட்டத்திலிருந்து B-/B என்ற மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அத்துடன், குறித்த தரப்படுத்தலின் எதிர்காலக் கண்ணோட்டம் நிலையானதாக (Stable) காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் அரச வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை மற்றும் சவாலான வெளிப்புறப் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு கையிருப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றமை ஆகிய காரணிகள் இந்தத் தரப்படுத்தல் உயர்வுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியின் தாக்குப்பிடிக்கும் திறன் காரணமாக அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்புகள் மேலும் வலுப்பெறும் என S&P Global தெரிவித்துள்ளது.
அத்துடன், கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு காணப்படும் அபாயங்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நீண்டகாலக் கடன் தரப்படுத்தலின் எதிர்காலக் கண்ணோட்டம் நிலையானதாக உள்ளதுடன், பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் கொள்கைகளை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக S&P Global Ratings வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தல்களின் எதிர்காலக் கண்ணோட்டம் நிலையானதாகப் பேணப்பட்டுள்ளது.
அதேவேளை, குறுகியகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தல்கள் C என்ற மட்டத்திலிருந்து B என்ற மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.
நிதி பரிமாற்றம் மற்றும் நாணய மாற்றத்திற்கான இயலுமை தொடர்பான மதிப்பீடு B- என்ற மட்டத்திலேயே தொடர்வதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தையில் நீண்டகால இடையூறுகள் காணப்பட்டாலும், எதிர்வரும் 6 முதல் 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் தாக்குப்பிடிக்கும் திறனைத் தொடர்ந்து பேணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் கொள்கைகள் ஊடாக அரச நிதி நிலைமை மற்றும் வெளிப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதால், இலங்கையின் பொருளாதார நிலைமை ஸ்திரமானதாகக் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், நிதி திரட்டுவதில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பணப்புழக்க நெருக்கடிகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், கடன் தரப்படுத்தலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri