இலங்கையில் பயணிகள் ட்ரோன் போக்குவரத்து! இன்று முதல் சோதனை
இலங்கையில் ஆளில்லா பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவையின் அதிகாரப்பூர்வ சோதனை நடவடிக்கை இன்று(11.11.2026) நடத்தப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, இந்த சோதனை நடவடிக்கையின் போது ட்ரோனில் பயணம் செய்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில், ஈஹாங் என்ற சீன நிறுவனத்தின், செங்குத்தாக மேலே எழுந்து, தரையிறங்கக் கூடிய மின்சாரத்தால் இயங்கும் பயணிகள் ட்ரோன்(eVTOL - electric Vertical Take-Off and Landing) பயன்படுத்தப்பட்டது.
வணிக ரீதியான பயணிகள் போக்குவரத்து
ஓடுதளம் இன்றி, செங்குத்தாக மேலே எழுந்து மீண்டும் தரையிறங்கக் கூடிய இந்த வகையான ட்ரோன்களை, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத் துறை மற்றும் அவசர கால சேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான சோதனை நடவடிக்கைகள் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் 6 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக, இரு பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய E214 ரக ட்ரோன் ஒன்று ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ட்ரோன் விமானத்தை, ஒரு மத்தியக் கட்டுப்பாட்டு் நிலையத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்தே இயக்க முடியும் என்பதுடன், அவசரக காலத்திலோ அல்லது தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற அவசர காலங்களில், இது தானாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த பயணிகள் ட்ரோன் சேவை நடைமுறைக்கு வரும்போது, சீகிரியா, பிதுரங்கல மற்றும் நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை வான் வழியாக அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புக்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சோதனை நடவடிக்கையின் பின்னர் அமைச்சர் அனுர கருணாதிலக்க தனது பயண அனுபவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "நான் பறந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு கூறுகையில், “அடுத்த ஆறு மாதங்களுக்குள் ட்ரோன்களைப் பயன்படுத்தி வணிக ரீதியான பயணிகள் போக்குவரத்து சேவைகளை தொடங்க எதிர்பார்ப்பதாக” தெரிவித்துள்ளார்.