முற்றாக முடக்கப்பட்டது இலங்கை! இறுதி முயற்சியில் தொக்கி நிற்கும் இலங்கையர்களின் வாழ்க்கை
மிகக் கடுமையான ஒரு பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அழிவை இலங்கை சந்தித்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.
பொருளாதார நெருக்கடியின் கோரத்தை சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் முதற்கொண்டு, வசதிப்படைத்தவர்கள் வரை உணர்ந்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.
அதிகரிக்கும் சுமை
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்கள் பற்றாக்குறை, எரிவாயு விலை அதிகரிப்பு, எரிவாயு வரிசை, பற்றாக்குறை, எரிபொருள் இன்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு என பொதுமக்கள் மீதான சுமை தொடர்ந்து அதிகரித்தே செல்கின்றது.
இவை அனைத்தையும் விட கொடியது, மருந்துப் பற்றாக்குறை... கிட்டத்தட்ட அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் உயிரிழக்கும் பரிதாப நிலைமையை இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரை பறிகொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இலங்கையில் தான் உள்ளது.
உச்சக்கட்ட கொதிநிலையில் மக்கள்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் வரிசையில் காத்திருந்து காத்திருந்து விரக்தியடைந்த பொதுமக்களுக்கு இந்த இந்த அறிவிப்பு எரியும் தீயில் எண்ணெய்யை வார்த்தது போல கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாட்களாக பசி, பட்டினியுடன் வரிசையில் வெயிலில் நொந்து காத்திருந்த மக்கள் கிட்டத்தட்ட இந்த அறிவிப்பினால் உச்சக்கட்ட கொதிநிலையை அடைந்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் எனும் போது பலர் இங்கு பாதிப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
சாதாரணமாக கூலி வேலை செய்பவர்கள், அன்றாடம் உழைத்து வாழ்ந்து வருபவர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் கடுமையான இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் அன்று உழைத்து தங்களது குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளும் மக்கள் இவ்வாறான நிலையில் அடுத்தக் கட்டம் என்ன என்பது தொடர்பில் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், முச்சக்கர வண்டியை நம்பியிருக்கும் பலரும் பாதிப்படையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
ஏற்கனவே ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம்
இவ்வாறிருக்க அவசரத்திற்கு வைத்தியசாலைக்கு செல்வோர் வாகனங்கள் இன்றி தத்தளிக்கும் நிலை தலைவிரித்தாடுகின்றது.
இவ்வாறு சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாமல், அதுவும் எரிபொருள் பிரச்சினையின் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாமல், பிறந்து இரண்டே நாளான ஒரு குழந்தை, பாம்புக்கடிக்கு இலக்கான ஒரு சிறுவன், குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒரு சிறுவன் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் நீண்டு கொண்டே செல்கின்றது.
அதையும் தாண்டி, அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தினால், பேருந்தில் செல்ல முடியாத நிலையில் புகையிரதத்தில் செல்ல காத்திருந்த இளைஞன் ஒருவர் சன நெரிசலால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்த கொடூரமும் நாம் அறிந்ததே.
குறிப்பாக, தோட்டப் புறங்களில் பெரும்பாலான பகுதிகளில் தோட்டப் பகுதிக்குள் செல்வதற்கான பொது போக்குவரத்து வசதி கிடையாது.
கிட்டத்தட்ட, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதென்றாலோ, வைத்தியசாலையை அல்லது வங்கியை நாடுவது என்றாலோ கிட்டத்தட்ட 10 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் நகரத்தையே நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவசர மருத்துவத் தேவையின் நிமித்தம் நபர் ஒருவர் செல்ல வேண்டி ஏற்பட்டால் முச்சக்கர வண்டியைத் தான் நாட வேண்டிய நிலை இருந்தது.
தற்போதைய சூழலில் அது முற்றிலும் முடியாத காரியமாகவே பார்க்கப்படுகின்றது. சில கிராமங்களிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
இதன்காரணமாக எதிர்காலத்தில் பல உயிரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம் . குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலேயே பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை பிரசவிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படலாம்.
தொக்கி நிற்கும் மக்கள் வாழ்க்கை
எரிபொருளைத் தாங்கிய கப்பல் இன்று வரும், நாளை வரும் என்று பல நாட்களாக அமைச்சர் கஞ்சன அறிவித்து வந்த நிலையில், அதனை நம்பி வரிசையில் காத்திருந்த மக்களுக்கு விழுந்த மற்றுமொரு அடியே இந்த அறிவிப்பு.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவி கோரி, ரஷ்யா மற்றும் கட்டார் போன்ற நாடுகளை இலங்கை நாடியிருக்கின்றது. இந்த முயற்சிகள் வெற்றியளிக்கலாம், வெற்றியளிக்காமலும் போகலாம், ஆனால் இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது என்பதே உண்மை.
இந்த முயற்சிகள் இறுதியாகவிருந்தால் அடுத்தது என்ன என்பதே மக்களிடத்தில் இருக்கும் கேள்வி...?
சொல்லப்போனால், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு முடக்க நிலை அறிவிக்காமலேயே முழு நாடும் முடக்கப்பட்ட ஒரு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.