தள்ளுபடி செய்யப்படும் கடன்கள்! அரச நிறுவனங்களில் புதிய முறைமை - இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ரணில் அறிவிப்பு (Video)
இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சிலர் இதனை சாதாரணமாக எடுத்து கொள்கிறார்கள். எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் இலங்கையின் முரண்பாட்டு அரசியலே பொருளாதார பின்னடைவுக்கான காரணம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டின் இந்த வரவுசெலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் அது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.
இந்த வரவுசெலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுடன் கூடிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களை 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை இலக்காகக் கொண்டு முன்வைக்கவுள்ளதாகவும், அரச வருமானம் அதிகரிக்கும் போது பணத்தை அச்சிட வேண்டிய தேவை படிப்படியாகக் குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள்,
- பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்.
- கல்வி, சுகாதாரம் உட்பட்ட பல்வேறு பொது விடயங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- அரச நிறுவனங்களில் மோசடிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேவைகளை விஸ்தரிக்கும் வகையில், சில பிரதேசசபைகளை, அண்மையில் உள்ள நகரசபைகளுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
- அரச சேவைகளில் ஓய்வூதிய வயது 60 வயதாக வரையறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அரச சேவையில் 60 வயதானவர்கள், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியன்று ஓய்வுப்பெறுவர்.
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மின்சாரசபை, எரிபொருள் கூட்டுத்தாபனம் உட்பட்ட 50 நிறுவனங்கள் தொடர்பில் எதிர்கொண்டு வரும் நட்டங்கள் காரணமாக, மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
- அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை, தனியார் துறைகளையும் இதனை பின்பற்றுவதற்கு பரிந்துரை
- சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை
- மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி
- மலைநாட்டு பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு புகையிரதத்தின் ஊடாக மரக்கறிகளை கொண்டு செல்வதற்கான செயற்திட்டம்
- கொவிட் தொற்றால் தொழிலை இழந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சியை வழங்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
- எரிவாயு கையிருப்பினை உறுதிப்படுத்த அதன் இறக்குமதிக்காக 70 மில்லியன் டொலர் ஒதுக்கம்
- கர்ப்பிணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மேலும் 2500 ரூபாவை வழங்கத் தீர்மானம்
- விவசாயத் துறையில் நிலுவையிலுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
- நாட்டில் சுமார் 61,000 குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளன. அவற்றுக்கு சர்வதேச நிதியுதவியுடன் நிவாரணங்கள்
- சமுர்த்தி பெறுனர்கள் , முதியோர் கொடுப்பனவைப் பெறுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுக்கான கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு
- பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு
- மத்திய வங்கி மற்றும் பணம் அச்சிடுதல் குறித்து புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
- நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
- வட் வரி செப்டம்பர் முதலாம் திகதி முதல் 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும்