ஒப்பந்தத்தை மீறி வங்கிகளின் நடவடிக்கை! இலங்கையில் கடன் பெற்றவர்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் விடயம்(Video)
வங்கிகளில் நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“உள்நாட்டு கடன் மீள் கட்டமைப்பு நடைபெறும் என ஜனாதிபதி உறுதியாக கூறுகின்றார். இவ்வாறு உள்நாட்டு கடன் மீள் கட்டமைபு நடைபெற்றால் அந்த சுமைகளை வங்கிகள் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளன.
இருப்பினும் நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன. இதற்கமைய வங்கிகள் கூறியதை போன்று செயற்படவில்லை.
இந்நிலையில் உள்நாட்டு கடன் மீள் கட்டமைபு மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடைபெறும் என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கிகள் சொல்வதை செய்யாமல் அரசாங்கம் சில தொகைகளை குறைத்த உடன் மத்திய வங்கியின் சுற்றுநிரூபத்துடன் வங்கிகள் செயற்பட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
வங்கிகளில் மக்கள் கடன் பெறும் போது பல்வேறு இடங்களில் கையொப்பம் இடுகின்றார்கள். அதில் ஏதோ ஒரு இடத்தில வங்கிகள் ஒரு குறிப்புரையை வைத்திருக்கும்.அதாவது தேவைப்பட்டால் நாங்கள் சில மாற்றங்களை செய்துக்கொள்வோம் என்று, அதை பலர் வாசிப்பதில்லை.
இதேவேளை ஒப்பந்தத்தின் பிரதியை வங்கிகள் எக்காரணம் கொண்டும் மக்களுக்கு கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொள்வார்கள்.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |