பொறுப்பேற்குமாறு கோட்டாபய விடுத்த அழைப்பு! நவம்பர் 2இல் போராட்டம் வெடிக்குமா
வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டை அதில் இருந்து மீட்டு முன்னேற்றுவதற்கு நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாச உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் யாரும் முன்வராத நிலையில், மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை 2015இல் இருந்த நிலைமைக்கு கொண்டுவரவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
சதித்திட்டங்களுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது
அதனால் போராட்டங்களை நடத்தி நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு மேற்கொண்டுவரும் சதித்திட்டங்களுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.
நாட்டை முன்னேற்றுவதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தடைப்பாட்டால் மக்களுக்கே அதன் பாதிப்பு ஏற்படும்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைக்கப்பெற்ற 69இலட்சம் மக்கள் ஆணையைக்கொண்டு, மக்களின் பிரச்சினைகளை இனம்கண்டு, நாட்டை நிர்வகிக்க முடியாமல் போனது. அதனால் நாட்டின் அனைத்து துறைகளும் செயலிழந்தன.
மக்களுக்கு வாழமுடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் விரக்தியடைந்த மக்கள் சுயாதீனமாக கட்சி பேதமின்றி வீதிக்கிறங்கி போராட்ட ஆரம்பித்தனர். அதன் விளைவாகவே கோட்டாபய பதவி விலகவேண்டி ஏற்பட்டது.
வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டை அதில் இருந்து மீட்டு முன்னேற்றுவதற்கு நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாச உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் யாரும் முன்வராத நிலையில், மக்களின் கஷ்டத்தை உணர்ந்து, ரணில் விக்ரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தார்.
ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு இருந்துவந்த தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுத்தார்.
அதனைத்தொடர்ந்து இதன் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, தற்போது படிப்படியாக எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைந்து வருகின்றது.
நவம்பர் 2இல் போராட்டம் வெடிக்குமா
2015இல் எமது அரசாங்கத்தின் போது எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை எந்த அளவில் இருந்ததோ அதே நிலைமைக்கு கொண்டுவரவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தை இல்லாமலாக்கி, ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப நவம்பர் 2ஆம் திகதி மக்கள் வீதிக்கு இறங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உட்பட சில அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன.
மக்கள் விடுதலை முன்னணியின் இந்த நடவடிக்கை நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச்செய்து, மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கவைப்பதற்கான முயற்சியாகும்.
அதேபோன்று நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்வதே இவர்களின் நோக்கமாகும். அதனால் மக்கள் இவர்களின் சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என குறிப்பிட்டார்.