கொழும்பில் மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் (Video)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸாரினால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பொலிஸ் நிலையம் மற்றும் குற்றதடுப்பு விசாரணை பிரிவு
இந்நிலையில் ருவான் விஜயமுனி என்ற ஒரு நபர் கொழும்பு கொம்பணி தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.
குறித்த சந்தேகநபர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
அத்துடன் இன்னும் பலர் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறான கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடை சட்டம்
மேலும், கொழும்பு லிக்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுடைய ஆர்ப்பாட்ட பேரணியின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களையும் விடுதலை செய்யக் கோரி காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் ஒரு குழுவிரால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும், பொலிஸாரின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.