நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள்
யாழ்ப்பாண மாவட்ட செயலகம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04.02.2025) காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் சோமசுந்தரம் அவினியு வீதியில் இருந்து மாணவர்களின் பேண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றது.
தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசியம் கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கை இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
கிளிநொச்சி மாவட்ட செயலகம்
இலங்கையின் 77வது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி - எரிமலை
வவுனியா வாகண பேரணி
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் பேரணியானது, கண்டி வீதி ஊடாக சென்று பஜார் வீதியினை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து கண்டி வீதி ஊடாக சென்று வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது.
செய்தி - திலீபன்
திருகோணமலை மாவட்ட செயலகம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சனவினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
செய்தி - ஹஸ்பர்
கல்முனை பிரதேச செயலகம்
நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வுகள் இன்று(04/02/2025) இடம்பெற்றன.
கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய கடப்பாடு தொடர்பிலும் பிரதேச செயலாளரினால் தெளிவூட்டப்பட்டது.
செய்தி - பாறுக் ஷிஹான்
மரநடுகை நிகழ்வு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77ஆவது சுதந்திர தினம் இன்று(04) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் கொண்டாடப்பட்டது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் மரைக்காயர்மார்கள் புடைசூழ தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சுதந்திர தினத்தையொட்டி பள்ளிவாசல் வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
செய்தி - பாறுக் ஷிஹான்
கிளிநொச்சி சமூக அமைப்பு
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் 400இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து இன மதங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தேசியக்கொடியினை சர்வ மதத் தலைவர்கள் இணைந்து ஏற்றி வைத்ததை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
செய்தி - எரிமலை
கல்முனை மாநகர சபை
கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77ஆவது தேசிய சுதந்திர தின விழா இன்று கல்முனை வாசலில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பேரவை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதன்போது, கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம். எம்.அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.ஆசிக், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் மாநகர சபையின் பிரதி ஆணையாளருமான ஏ.எஸ்.எம்.அஸீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜெளஸி,கல்முனை சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் பிரமுகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.மாநகர
செய்தி - பாறுக் ஷிஹான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |