வடக்கு கிழக்கு தமிழர்கள் ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கான வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறார்கள்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் இருந்து ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற தமிழர்கள் மிகவும் குறைவு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று(06.12.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பயிற்சி நிலையங்களின் தகுதி
“தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தொடர்பான விவாதத்தில்
கலந்து கொண்டு ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன்.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குகின்ற திட்டங்கள் ஊடாக நடத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் வடக்கு கிழக்கில் இல்லை என்றும் அதனால் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய மக்களுக்கு முழுமையாக அந்த வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அரச தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இங்கு முதலில் குறிப்பிட்டிருந்தார்.
இதைப்பற்றியே நான் விரிவாகக் கூற விரும்புகின்றேன். ஏனென்றால் கிட்டத்தட்ட 6500 பேர் இதுவரை தென்கொரியாவுக்கு சென்றிருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கில் இருந்து சென்ற தமிழர்கள் மிகவும் குறைவு. சொல்லுவதற்குரிய எண்ணிக்கையில்லை. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் நலிவுற்ற ஒரு பிரதேசமாக இருக்குமிடத்தில் இந்த வாய்ப்புக்களையும் அந்த மக்களுக்கு கிடைக்காமல் பண்ணுவதை நியயப்படுத்தவே முடியாது. அதற்குக் காரணம் வடக்கு கிழக்கில் உள்ள பயிற்சி நிலையங்கள் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை.
ஆகவே இவ்வாறு இருக்கக்கூடிய குறைபாடுகளுக்கு காரணமாக கொரிய மொழி பேசக்கூடியவர்கள் தேவை என்று காரணம் சொல்லுகிறீர்கள். அதற்குரிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது எங்களுடைய வேலையில்லை. அது அரசாங்கத்தின் வேலை.
அமைச்சின் நோக்கம்
நீங்கள் அதற்கான தெளிவூட்டல்களைச் செய்து அதற்குரிய ஆட்கள் இருக்கிறார்களா? என்று இனங்கண்டு, சம்பளத்தின் படிநிலை என்பவற்றை விளம்பரப்படுத்தி, ஆட்களைத் தெரிவு செய்து, அதன்பின் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி மக்களைத் தயார்படுத்துவதற்குரிய வேலைகளை நீங்கள் செய்யவேண்டும்.
அதனைச் செய்யாமல், வாய்ப்புக்களை இழக்கப்பண்ணி, பொருளாதாரத்தில் ஓரளவு முன்னிலையில் இருக்கக்கூடிய இடங்களுக்கு அந்த வாய்ப்புக்களை வழங்கிவருவது உண்மையிலேயே பொருத்தமில்லாத விடயமாகும். நீங்கள் இதனை மாற்றியமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
இது குறைகூறுவதற்காக நான் சொல்லவில்லை. மாறாக இது தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநியாயமாகும். அந்த வகையிலேயே நீங்கள் இதனை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அடுத்து வெளிநாட்டு அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது .அந்த அறிக்கையில் தங்களுடைய அமைச்சின் நோக்கம் சிறிலங்காவின் தேசிய நலன்கள் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்வதும் சர்வதேச மட்டத்தில் அந்த தேசிய நலன்களுக்காக சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்பதும் தான் உங்கள் கொள்கையாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
தேசிய நலன்கள்
கேள்வி என்னவென்றால்? தேசிய நலன்கள் என்று சொல்வது என்ன? இந்த தேசிய நலன்கள் சிறிலங்காவில் இருக்கக் கூடி பல்தேசிய அடையாளங்களை விளங்கி அங்கீகரித்து இந்தப் பல்தேசங்களுடைய நலன்கள் அனைத்தையும் உள்வாங்கி முன்னெடுக்கின்ற செயற்பாடுகளா?
அல்லது எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சிங்கள தேசத்தின் நலன்களை முன்னெடுத்து, இதன்மூலம் புறக்கணிக்கப்படுகின்ற மற்றைய தேசங்கள் இனங்களுக்கு எதிராக செயற்படுவது தான் தேசிய நலன்கள் என்ற உங்களுடைய வெளிவிவகாரக் கொள்கையா? எங்களைப் பொறுத்த வரையில் - இரண்டாவதாக குறிப்பிட்ட விடயம் தான் இங்கு நடைபெறுகின்றது. இதனை குறைசொல்வதற்காக நான் குறிப்பிடவில்லை.
ஆனால், இது தான் யதார்த்தமாகும். இதனை நீங்கள் மாற்றியமைக்காமல் இருக்கும்வரை நாங்கள் அதனை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். ஏனெனின் உங்களுடைய இந்தக் கொள்கையால் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்“ என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |