கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து சேவை(Photos)
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து இன்று(13.07.2023) பயணித்தது.
இந்த விசேட தொடருந்து, போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
விசேட தொடருந்து சேவை
இந்த விசேட தொடருந்தானது, அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.
போக்குவரத்து, பெருந் தெருக்கள் அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.
இந்தியாவுக்கு நன்றி
இதன்போது வடக்குக்கான தொடருந்து பாதையை திருத்துவதற்காக (98 மில்லியன் அமெரிக்க டொலர்) 3ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களை தந்துதவிய இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமான தொடருந்து சேவைகள், தொடருந்து பாதையை திருத்துவதற்காக நிறுத்தப்பட்டது.
இந்திய அரசாங்கம் அனுராதாபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதைகளை திருத்துவதற்கு பாரியதொரு நிதி பங்காளிப்பை வழங்கியமை வடக்குக்கான நிறுத்தப்பட்ட தொடருந்து மார்க்கத்தை விரைவுப்படுத்துவதற்கு உதவியாக அமைந்தது.
அதேபோன்று இந்திய அரசினால் இலங்கை போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய பேருந்துகள் வழங்கப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேகச் செயலாளர் குலேந்திரன் சிவராம், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறி மோகன், மற்றும் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலதிக செய்தி-கஜிந்தன்








