சிறப்பு பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சனத் மற்றும் மிலான் ஜயதிலக்க
கொழும்பு காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் சிறப்பு பாதுகாப்புடன் சிறைச்சாலையில் இருந்து இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் நாடாளுமன்ற அவையில் இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இவர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு நேற்று சிறைச்சாலை ஆணையாளருக்கு அறிவித்ததாக நாடாளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.