மலையக மக்களுக்கு விசேட நிவாரண திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்: வேலுகுமார்
மலையக மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்ட குறிப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
எரிபொருட்களை பெறுவதற்கான வரிசைகளும் பல கிலோமீட்டர் வரை நீண்டு செல்வதோடு எரிபொருட்களை பெற பல நாட்கள் தொடர்ந்து வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை நாட்டின் அனைத்து துறைகளின் செயற்பாட்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. குறிப்பாக பொருட்களின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க கிடைக்கப்பெறும் பொருட்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருக்கின்றது.
வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத மலையக பகுதிகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் உடனடியாக மலையக மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.
மலையக மக்கள்
மலையகங்களில் வேலை நாட்களும் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது. மலையகங்களில் இருந்து வெளி நகர் புறங்களில் வேலை செய்தவர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடியினால் வெளி இடங்களில் சென்று வேலைகளை செய்வதற்க்கும் முடியாது இருக்கின்றது.
மறுபுறம் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருள் தட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறான சூழலில் மலையக மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களும் மலையக மக்களுக்கு ஒழுங்கான முறையில் கிடைக்கப்பெறவில்லை. பொதுவாகவே நிவாரணங்கள், உதவி திட்டங்கள் மேற்கொள்ளும் போது மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படுவது வழமை. அதுவே இந்திய நிவாரண பொருட்களிலும் நடைபெற்றிருக்கின்றது.
தொடர்ந்து வரும் நாட்களில் நிலைமை மிக மோசமானதாக காணப்பட போகின்றது. அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கென தனியான நிவாரண திட்டமொன்றை முன்னெடுத்தல் வேண்டும்.
அவ்வாறு இல்லாத நிலையில் பாராபட்சத்திற்கு மத்தியில் மிக மோசமான பாதிப்பை மலையக மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
இன்றைய அரசாங்கத்திற்கு எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர்கள் "அரசில் இருந்து வெளியேறிவிட்டோம்" என கூறி தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இன்றைய அனைத்து நிலைமைகளுக்கும் இவர்கள் பொறுப்பு கூற வேண்டும்” என கூறியுள்ளார்.