கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் புதிய நடைமுறை
மேல் மாகாணத்தில் (western province) இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக புதிய பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பில் (Colombo) பொலிஸாரால் கண்காணிக்கப்படும் 176 சிசிடிவி (CCTV) கெமராக்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Desabandhu Tennakonin) பணிப்புரையின் பேரில் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள் துரித கதியில் அதிகரிப்பு
கடந்த 3 வருடங்களில் மேல் மாகாணத்தில் (western province) 25 பொலிஸ் அதிகார எல்லைகளில் குற்றச்செயல்கள் துரித கதியில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் கடந்த ஆண்டில் 846 தங்க நகை கொள்ளைகள், 12,125 வீடுகள் உடைப்பு மற்றும் 1,748 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது நாடு முழுவதும் நடந்த குற்றங்களில் 32% ஆகும்.
அதன்படி 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்துமாறு நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிரிவுகளின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழு
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் T56 ரக துப்பாக்கிகள் வழங்கி அந்தந்த பகுதிகள் கண்காணிக்கப்படவுள்ளன.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 20 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக, பொலிஸ் மா அதிபர் (Desabandhu Tennakonin) எதிர்காலத்தில் 10 பொலிஸ் குழுக்களையும் கடமையில் ஈடுபடுத்தவுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படை (Special Task Force) அதிகாரிகளுடன் 100 பேர் கொண்ட மற்றுமொரு பொலிஸ் குழுவும் விசேட பயிற்சிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் இலக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதே ஆகும்.
அதன்படி, தனியார் வீடுகளில் உள்ள சிசிடிவியும் அவர்களின் விருப்பப்படி பொலிஸாரால் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |