முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்களுக்காக முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டம் (Photos)
முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மாடுகளுக்கான பண்ணைகளை பதிவு செய்து உச்ச பயன் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய அவர் விடுத்துள்ள கோரிக்கையில் பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்வதற்கான கோரிக்கைகள்
இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ம் ஆண்டில் இருந்தே முக்கிய விடயமாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பல பண்ணையாளர்கள் இதில் ஆர்வமற்று இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது Online மூலமும் இவை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், காதுப்பட்டி இல்லாத மாடுகளை அரச உடமையாக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
விலங்குகளுக்கு காதிலக்கம் பொருத்தும் வேலைத்திட்டமானது இலங்கை முழுவதும் நடைபெறும் என்பதனாலும் ஒவ்வொரு விலங்கும் கட்டாயமாக காதுப்பட்டியுடன் காணப்பட வேண்டும் என்று வடமாகாண உயர்மட்ட அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளதனாலும் பண்ணையாளர்கள் இதற்காக முக்கிய கவனத்தை எடுத்து செயற்பட வேண்டும் என்று மிக அவசியமாக வலியுறுத்தப்படுகின்றனர்.
பண்ணைகளை பதிவுசெய்வதற்கான கோரிக்கைகளினை கால்நடை வைத்திய அலுவலகங்களில் தெரியப்படுத்தி பதிவதற்கான படிவங்களைப் பெற்று முற்பதிவு செய்யுமாறும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை இக்கோரிக்கைக்கான படிவங்களை கால்நடை வைத்திய பணிமனைகளில் பெற்று அவற்றை பூரணப்படுத்தி மீண்டும் வைத்தியர்களிடம் இதனை கையளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |