மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்த விசேட கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,இராணுவ,பொலிஸ் அதிகாரிகள்,உதவி பிரதேச செயலாளர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், அவற்றினை கட்டுப்படுத்தும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், மாமாங்கம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,அப்பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கோவிட் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்தல் மற்றும் ஏனைய பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளைப் பேணுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், அறிவுறுத்தல்களை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.







