விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“யுத்த காலத்தில் எங்களுக்குச் சீனாவிலிருந்து தோட்டாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்ட பிறகு, எங்களிடம் பீரங்கித் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டன. நிலைமை குறித்து அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவிடம் தெரிவித்தோம்.
2005 ஜனாதிபதித் தேர்தல்
அதற்கு அவர், 'சீனாவிலிருந்து தோட்டாக்களைக் கடனாகவே இறக்குமதி செய்கின்றோம். எனவே, அவர்கள் அவற்றை அனுப்பவில்லை என்றால் எங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது' என்றார்.
அதன் பிறகு, பசில் ராஜபக்சவுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவர் ஒரு தொலைபேசி அழைப்பே மேற்கொண்டு பீ.பி.ஜயசுந்தரவுக்குச் சொன்னார். ஒரு தேவையொன்று உள்ளது, உடனடியாக இராணுவத் தளபதிக்கு 100 மில்லியன் டொலரை வழங்குமாறு கூறினார்.
5 நிமிடத்தில் அவர் அதனைச் செய்தார். அதன் பிறகு, ஒரு மணி நேரம் வரையில் ஒரு நட்பு ரீதியான கலந்துரையாடல் பசிலுடன் இடம்பெற்றது. 2005ஆம் ஆண்டில், வடக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பசில் ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ததோடு, அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க கடற்புலிகள் பயன்படுத்தும் டோரா வகை படகுகளுக்காக மலேசியாவுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும், அதற்காகப் பணம் வழங்குமாறும் கோரியுள்ளனர்.
அதற்கமைய, அந்த அமைப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அது வெளிநாடு ஒன்றில் வைத்து வழங்கப்பட்டது. அந்த நாடு எது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அதிலிருந்து தாக்குதல் படகுகள் வந்து எங்களைத் தாக்கின.
ஏராளமான அப்பாவி கடற்படையினர் இறந்தனர். இவர்கள் செய்தது தேசத் துரோக செயல் இல்லையா? மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் பணியாற்றிய போதிலும் அவர் கடலுக்குச் சென்று யுத்தம் புரியவில்லை.
மகிந்த ராஜபக்ச ஒரு கோழை
யுத்தம் செய்து நாங்கள் முல்லைத்தீவைக் கைப்பற்றிய பிறகு, கோட்டாபய ராஜபக்ச என்னிடம் அன்பாகப் பேசி, 'சரத், நீங்கள் இப்போது சோர்வாக இருக்கிறீர்கள். இரண்டு வருடங்களாகப் போராடி வருகிறீர்கள். இப்போது அந்த வேலையை ஜகத் ஜயசூரியவிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றார். நான் மறுத்துவிட்டேன்.
பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்னை அழைத்து, ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டார். எங்கள் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த ஒரு பெரிய தாக்குதலில் எங்கள் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
மார்ச் மாத நடுப்பகுதியில் போரை நாங்கள் முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கை மே மாத நடுப் பகுதி வரை இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர். இதற்கு மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷவை சிலர் சிங்கம் என்று கூறினாலும் உண்மையில் அவர் ஒரு கோழை. மகிந்த ராஜபக்ச ஒரு துரோகி என்றும், விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாலும், ஏராளமான வீரர்கள் இறந்ததாலும் அவர் ஒரு கோழை என்றும் நான் சொன்னேன்.
எனவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். இன்று, தான் போர் நிறுத்தத்தை அறிவிக்கவி்லலை என்று மகிந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
அமைச்சர் பதவி
தற்போதைய அரசு, சட்டத்தைச் செயற்படுத்த முயற்சிக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். இப்படி நாட்டைக் காட்டிக் கொடுத்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் ஏராளமான மர தளபாடங்களைத் திருடியுள்ளனர். மே 17 அன்று காலையில் மகிந்த, கோட்டாபய, பசில் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட ஏனையவர்களுக்கு இடையே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, அதில் விடுதலைப் புலிகளை அடிபணிய வைக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடிகளைக் காட்டி சரணடைவார்கள் என்றெல்லாம் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளைக் கொன்று இந்தப் போரை நிறைவு செய்ய வேண்டும் என்று மட்டுமே நான் நின்றேன்.
அப்படி இல்லையெனில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்.
கே.பி. மற்றும் பிள்ளையானை இன்னும் நடிக்க வைக்கின்றார்கள். கோட்டாபயவும் மற்றவர்களும் போரைத் தடம் புரள வைப்பதற்காகப் பல முறை முயற்சித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
