இலங்கை மக்களின் செயலை பாராட்டிய எதிர்க்கட்சி தலைவர்
எல்ல-வெல்லவாய பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்த அவர், இந்த பயங்கரமான வாகன விபத்தில் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
அறிக்கை
அந்த அறிக்கையில்,''எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதைக் குறைக்க தேவையான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் கொள்கை முடிவுகளையும் எடுக்க நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், தங்கல்ல நகர சபையின் செயலாளர் உட்பட, எல்ல பகுதியில் நேற்று இரவு நடந்த துயரமான பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைவரின் நித்திய சாந்திக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
அதே நேரத்தில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகளின் உயிரைக் காப்பாற்ற விரைவாகச் செயல்பட்ட பொலிஸார், மீட்புக் குழுக்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் எல்ல மக்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு எங்கள் மரியாதையையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உன்னதமான குணம்
இந்த துயரச் சம்பவம் மீண்டும் ஒரு முறை நமது தேசமாக நமது உன்னதமான குணத்தை எடுத்துக்காட்டுகிறது.
அதிக இருள் சூழ்ந்த பகுதியில் மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்தது நமது நாட்டு மக்களின் பேரிடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த இழப்பின் துயரத்தை, இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் தங்கல்ல நகராட்சி மன்ற ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சமீப காலங்களில் இதுபோன்ற பல துயரமான வாகன விபத்துகளைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.''எனவும் தெரிவித்துள்ளார்.




