ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட், விமான நிலையங்கள் மற்றும் தனியார் விமான சேவைகள் ஆகியவற்றில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் என்பவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடைபெறாததால், இந்த நிறுவனங்கள் பாரியளவில் செயலிழந்துவிட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
விசாரணைக் குழு
இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து துரிதமாக விசாரணையை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கவும் அவர் குழுவுக்கு அறிவித்தார்.

இந்த விசேட விசாரணைக் குழுவிற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
அதன்படி, இந்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவின் செயலாளர்/ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே.சி. வெலியமுன குழு அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட விசாரணை அறிக்கை ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தவறான முடிவுகள் மற்றும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது, அவற்றைச் சீர்செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகள் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதும் இந்த ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவின் பணியாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam