சுற்றுலா பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டு: ஹரின் பெர்னாண்டோ
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டுக்களை வழங்குவது தொடர்பில் சுற்றுலா அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டு
விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்தவுடன் விமான நிலையத்தில் எரிபொருள் அனுமதிச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும்.
அதேவேளை எரிபொருள் அட்டை டாப்-அப் முறையின் கீழ் இயக்கப்படும்.
மேலும் இந்த சுற்றுலா எரிபொருள் அட்டைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ஒரு எரிபொருள் வழங்கும் பம்ப் ஒதுக்கப்படும்.”என கூறியுள்ளார்.