நிலக்கரி சர்ச்சை: ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கை
இலங்கைக்கு நிலக்கரி வழங்க டெண்டரை பெற்றுக் கொண்ட நிறுவனமான ட்ரைடென்ட் செம்பர் (Trident Chemphar) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கிடையில் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெண்டரைப் பெற்ற நிறுவனம்,நுரைச்சோலை மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை எந்த தாமதமும் இன்றி தொடர்ந்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரிசோதனையில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நிலக்கரி விநியோகத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும்,தங்களின் அனைத்து விநியோக மாதிரிகளையும் 'மூன்றாம் தரப்பிடம் மீள் ஆய்வு' செய்ய அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நிலக்கரி கப்பலின் தரம் தொடர்பான பிரச்சினை காரணமாக, விநியோக நிறுவனத்திற்கு இலங்கை அரசு அபராதம் விதித்துள்ளது.
இரண்டாவது நிலக்கரி கப்பலின் தரம் தேவையான அளவில் இருந்த நிலையில், மூன்றாவது நிலக்கரி கப்பலின் தரம் குறைவாக இருப்பதாக மின்சார சபை அதிகாரிகள் தற்போது கூறுகின்றனர்.
ஒவ்வொரு கப்பலின் தரமும் ஏற்றும் போதும்,நுரைச்சோலையில் இறக்கும் போதும் இரண்டு முறை பரிசோதிக்கப்படுகிறது. முதல் கப்பலில் இருந்து மாதிரிகளை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்ப எரிசக்தி அமைச்சு அனுமதித்திருந்தது.

ஆனால் நுரைச்சோலை அதிகாரிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கப்பல்களின் மாதிரிகளை பரி சோதிக்க மூன்றாம் தரப்பினருக்கு அனுமதிக்கவில்லை.
நிறுவனம் தங்கள் நிலக்கரியின் தரம் குறித்த திருப்தி அடையாததால், இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் மூன்றாம் தரப்பு ஆய்வகத்திலிருந்து மீள் சோதனை அறிக்கைகளைப் பெறுமாறு கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.